தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள்கள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வருகை புரிந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம், பி.எஸ்.ஜி கல்லூரியின் பவள விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உயர்கல்விகளில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. சிறப்புமிகு 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் இருக்கின்றன. சிறப்புவாய்ந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. மேலும், தகுதிவாய்ந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் 8 தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவ்வாறு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது.
100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.
நான் மட்டும் முதல்வன் அல்ல… தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக நம் மாநில இளைஞர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைய சமுதாயம் குறித்த கவலையும் இருக்கிறது. சில இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது கவலையளிக்கிறது.
இளைஞர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும். அடிமையானவர்களையும் அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். ஒரு மாணவன் அடிமையாவது அவனுக்கு மட்டுமல்ல… அவன் குடும்பத்துக்கு மட்டுமல்ல… மாநிலத்தின் வளர்ச்சிக்கே கவலையாக அமைகிறது. குறிப்பாக, மாணவிகள் சிலரும் அடிமையாவது மேலும் வருத்தத்தை உண்டாக்குகிறது. நல்ல கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களும் உண்டு. இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார்.