சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பாடகராகவும் மாஸ் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத்தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் ரிலிஸுக்கு ரெடியாக உள்ளன.
ஹேப்பி மூடில் கார்த்தி
கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடத்துள்ளது. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில் கார்த்தியுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிராமத்துப் பின்னணியில் கமர்சியலாக வெளியான விருமன், வசூலிலும் சம்பவம் செய்திருந்தது. இதனால் படு உற்சாகத்தில் உள்ள கார்த்தி, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
பாடகராக மாறிய கார்த்தி
மதுரையில் நடைபெற்ற விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், யுவன் சங்கர் ராஜா பங்கேற்றிருந்தார். அப்போது சூர்யா, கார்த்தி இருவரையும் முதன்முதலாக பாட வைத்தது நான்தான் என மேடையில் வைத்து கூறிய யுவன், இருவரும் எப்படி பாடினார்கள் என கலாய்க்க வந்தார். ஆனால், அதற்குள் சூர்யா அவரை செல்லமாக மிரட்ட, அப்படியே சிரித்துவிட்டு சென்றுவிட்டார். யுவன் சொன்னபடி பிரியாணி படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்ஸிசிப்பி’ என்ற பாடலை கார்த்தி பாடியிருந்தார்.
மீண்டும் பாடகர் அவதாரம்
இந்நிலையில், கார்த்தி தற்போது மீண்டும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். அமலா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் ‘கணம்’ படத்திற்காக, கார்த்தி ஒரு பாடல் பாடியுள்ளார். அமலாவின் கணவர் நாகர்ஜுனா உடன் கார்த்தி ‘தோழா’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள ‘கணம்’ படத்தை, ஸ்ரீ கார்த்தி இயக்கியுள்ளார். செப்டம்பர் 9ம் தேதி வெளியாகும் கணம் படத்தில் ரிது வர்மா, சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராப் ஸ்டைலில் செம்ம மாஸ்
‘கணம்’ படத்திற்காக ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள ‘மாறிப்போச்சோ’ என்ற பாடலை கார்த்தி பாடியுள்ளார். காலத்தின் முன்னால் எதெல்லாம் மாறிவிட்டது என்பதை விவரிக்கும் விதமாக, மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, கார்த்தி ராப் ஸ்டைலில் பாடி அதகளம் செய்துள்ளார். செம்ம ஸ்டைலாக கார்த்தி பாடியுள்ள வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்தி மீண்டும் பாடகராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடலை கார்த்தி ரசிகர்கள் டிரெண்டு செய்து வருகின்றனர்.