இலவசங்கள் வழங்க தடை கோரி வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: ஓய்வு பெறும் நாளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி நாள் பணியில், தேர்தல் இலவசங்கள் வழங்க தடை கோரிய வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு அவர் மாற்றினார். தேர்தலின் போதும், அதற்குப் பிறகும் அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்க தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வாறு வழங்கப்படும் இலவசங்கள், மக்களுக்கு வாழ்க்கையை உயர்த்தும் நலத்திட்டங்களே என்பதால் தடை விதிக்கக் கூடாது என திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாட்டின் நலன் சார்ந்தது என்பதால் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் எனவும், இதற்காக அனைத்து தரப்பினரும் கொண்ட குழு அமைக்க பரிந்துரைத்த தலைமை நீதிபதி ரமணா, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசிக்க வேண்டுமென வலியுறுத்தினார். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமணாவின் கடைசி பணி நாளான நேற்றும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி என்.வி.ரமணா பொறுப்பேற்றார். அவர் தனது 14 மாத கால பணியை நிறைவு செய்து நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

தனது கடைசி வழக்குகளில் ஒன்றாக தேர்தல் இலவசம் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு விரிவான விவாதங்கள் தேவை. இந்த விஷயத்தில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் என்ன, நீதித்துறை மூலம் நிபுணர் குழு நியமிக்கப்பட்டால், அது சரியான நோக்கத்திற்கு உதவுமா என்பது குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. தேர்தல் ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் வாக்காளர்களிடம் உள்ளது என கூறுவதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும், இலவசங்களால் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் கவலை கொள்வதையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.

மேலும், கடந்த 2013ம் ஆண்டில் தமிழக அரசுக்கு எதிராக சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில், இலவசங்கள் வழங்குவது ஊழல் நடவடிக்கை ஆகாது என உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனுதாரர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதை ஏற்றுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தின் சிக்கலை கருத்தில் கொண்டு, முந்தைய தீர்ப்பின் மறுபரிசீலனை உட்பட அனைத்து மனுக்களையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுகிறது. 4 வாரத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணை பட்டியலிடப்படும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

முதல் முறையாக நேரலை
* தலைமை நீதிபதி ரமணாவின் கடைசி பணி நாள் என்பதால், நேற்று வரலாற்றில் முதல் முறையாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் வழக்கு விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
* ‘தலைமை நீதிபதி ரமணா பதவிக்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் 224 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் முழு அளவில் 34 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,’ என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பாராட்டினார்.
* என்.வி.ரமணா மக்களின் நீதிபதியாக இருந்ததாகவும், முதுகெலும்புடன் செயல்பட்டதாகவும் புகழ்ந்த மூத்த வக்கீல் துஷ்யந்த் தேவ், கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தார்.

* புதிய தலைமை நீதிபதி இன்று பொறுப்பேற்பு
என்.வி.ரமணாவுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் விகாஸ் சிங், கபில்சிபல் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தலைமை நீதிபதி ரமணாவை பாராட்டி பேசினர். பின்னர், ரமணா பேசுகையில், ‘‘நம் முன் உள்ள மிகப்பெரிய சவால் நிலுவை வழக்குகள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். வழக்குகளை பட்டியலிடும் நடைமுறையில் நான் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார். ரமணா ஓய்வைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித் இன்று பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.