நொய்டா : நொய்டா சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்பட உள்ளன. இதேபோலே, 2020ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சி அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது.
கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் இதைவிட உயரம் குறைவானவையே. சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப் போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும்.
இத்தகைய கட்டட இடிப்பு வேலைகள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. உலகம் முழுவதும், விதியை மீறிய கட்டிடங்கள் தகர்த்துத் தரைமட்டமாக்கப்படுவது அரிதாகவே நடக்கும்.
கொச்சியில் நடந்த கட்டிடத் தகர்ப்புப் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஸ்டீல்ஸ் அண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனமும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே நொய்டாவின் பிரமாண்ட கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட உள்ளன.
நொய்டா இரட்டைக் கோபுரங்கள்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனம் எமரால்டு கோர்ட் என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்களைக் கட்டியது. இதில், ‘அபெக்ஸ்’ என்ற கட்டடம், 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், ‘செயான்’ என்ற கட்டடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் கொண்டது. இந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த இரட்டைக் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது.
நாள் குறிக்கப்பட்டது
இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து தரைமட்டமாக்கும் பணி, மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் எனும் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. இந்தக் கட்டிடம் வெறும் ஒன்பது விநாடிகளில் தரைமட்டமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடிப்பு நடவடிக்கைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெடிமருந்துகள்
இந்த இரட்டை கோபுரங்களில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. வெடிபொருட்கள் ட்ரில்லிங் மிஷின் மூலம் சுவர்கள், தூண்களில் துளையிடப்பட்டு உள்ளே வைக்கப்பட்டுள்ளன. வெடிமருந்து நிரப்பும் பணியில் 90 பணியாளர்கள் இந்தியாவை சேர்ந்த 10 வெடிமருந்து நிபுணர்கள், வெளிநாடுகளை சேர்ந்த 7 நிபுணர்கள் பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக 9,640 துளைகள் இடப்பட்டு 3500 கிலோ வெடிமருந்துகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சரியாக 28ஆம் தேதி 2.30 மணியளவில் இந்தக் கட்டிடம் தகர்க்கப்படும்.
முதல்முறை அல்ல
இந்தியாவில் வானளாவிய கட்டடங்களை இடிப்பது ஒன்றும் எளிதானதல்ல. அதே நேரத்தில் இது முதல் முறையும் அல்ல. உலகளாவிய அளவிலும் கூட அவ்வளவு எளிதில் பெரும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதில்லை. 2020ஆம் ஆண்டு, கேரளாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமார் 2,000 பேர் வசித்த இரண்டு ஏரிக்கரை சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை, அதிகாரிகள் இதேபோல தகர்த்தார்கள்.
கேரளா குடியிருப்பு
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மரடு பகுதியில் வேம்பநாடு ஏரிக்கு அருகில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்டதாக 19 தளங்களைக் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இதே பாணியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இடிக்கப்பட்டன. இதுவே, இதுவரை இந்தியாவில் விதிகளை மீறியதாக இடிக்கப்பட்டதில் உயரமான கட்டிடம்.
9 விநாடிகளில்
கட்டப்பட்டு 10 வருடங்கள் ஆன அந்த குடியிருப்பில் சுமார் 2,000 பேர் வசித்து வந்தனர். அது நீதிமன்ற உத்தரவின்படி வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு வெறும் 9 விநாடிகளில் தகர்க்கப்பட்டது. அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட 70 குடும்பங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டு நிறுவனம்
கொச்சி மரடு ஆல்ஃபா செரீன் டவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் ஸ்டீல்ஸ் மற்றும் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் வெடிக்கச் செய்தது. இடிக்கும் பணியின் போது சுவர்களில் விரிசல் காணப்பட்டதால், இந்த கட்டிடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள் குறித்தும் அச்சமடைந்தனர். ஆனால், அருகிலுள்ள வீடுகளுக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கூரைகளுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.