திருவனந்தபுரம்: கேரளாவில் எம்டிஎம்.மில் இருந்து வடநாட்டு கும்பல் நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்.களில் வாடிக்கையாளர்கள், கார்டை போட்ட பிறகு பணம் வருவது இல்லை. இதனால், பணமில்லை என்று திரும்பி சென்று விடுவார்கள். ஆனால், அவர்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வரும். இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரின் பேரில், வங்கி அதிகாரிகள் ஏடிஎம்.களில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதித்தனர்.
அப்போது, சில மர்ம நபர்கள் ஏடிஎம்மில் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வருவதற்கு முன்பாக இந்த கும்பல், ஏடிஎம்.மில் பணம் வரும் இடத்தில் ‘ஸ்கேல்’ போன்ற ஒரு சிறிய உபகரணத்தை பொருத்துகின்றனர். வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டை பொருத்தி பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள். ஆனால், இந்த உபகரணத்தால் பணம் வெளியே வராது. இதனால், மக்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். அவர்கள் சென்றதும், கும்பல் உள்ளே சென்று அந்த உபகரணத்தை அகற்றியதும் பணம் வெளியே வரும்.
இவ்வாறு பல லட்சத்தை அவர்கள் சுருட்டி உள்ளனர். வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், வடநாட்டுக் கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகின்றனர்.