திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் ஊராட்சியில் அடாவடி வசூல் வேட்டையால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவதால், இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டினம் ஊராட்சியில் பஜார் வீதிக்கு வருகின்ற லாரி, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு தினசரி வரி வசூல் செய்வதற்காக ஊராட்சி மூலம் ஆண்டுக்கு ஒருமுறை என ஏல முறையில் குத்தகை விடப்பட்டு அதை புதுப்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் குத்தகை எடுத்து புதுப்பட்டினத்திற்கு லோடு எற்றி வருகின்ற லாரி, மினி வேன் உள்ளிட்டவைகளுக்கு வாகனம் ஒன்றிற்கு ரூ.150 வசூல் செய்கின்றனர். ஊராட்சி மூலம் குத்தகை எடுத்தவர் அவர் தனியாக தன்னிச்சையாக மற்றொரு நபருக்கு ேமல் குத்தகை விட்டு அதை வசூல் செய்ய சில நபர்களை நியமித்து அந்த நபர்கள் வாகன ஓட்டிகளிடம் ஊராட்சியால்நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை கேட்டு கட்டாய வசூல் செய்வதாக வாகன ஓட்டிகள் வேதனைப்படுகின்றனர்.
இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்த மற்றும் முறைப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், ‘சுற்றுலா தலம் மற்றும் பெருநகரங்களில் உள்ள வாகன வரி வசூல் போன்று சாதாரண ஊராட்சியான புதுப்பட்டினத்தில் ஒரு வாகனத்திற்கு ரூ.150 வசூல் செய்கின்றனர். அதிலும், அரசுக்கு ஒரு ஏலத் தொகையை கட்டி குத்தகை எடுத்தவர் அவர் தனியாக மற்றொருவரிடம் அதிக தொகையை பெற்றுக் கொண்டு மேல் குத்தகை விடுகிறார். அதிக பணம் கொடுத்து மேல் குத்தகை எடுத்தவர், ஊராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட அச்சிட்ட பில்லுக்கு மேல் அதிக பணம் கேட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டாய மற்றும் அடாவடி வசூல் வேட்டை நடத்துகின்றனர்.
அதிக பணம் கொடுக்க மறுக்கும் ஓட்டுனர்களை அடிப்பது, வாகனங்களை துரத்தி சென்று வழிமறித்து சண்டை போடுவது என்று வரி வசூல் செய்பவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் மேலோங்கி போவதால் பொதுமக்களுக்கும் அவதி ஏற்படுவதுடன், வழியிலேயே நிறுத்தி அதிக பணம் கேட்டு சண்டை மற்றும் வாக்குவாதம் செய்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த நிலையை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் அவர்களும் கண்டு கொள்ளவும், கட்டுப்படுத்தவும் மறுக்கிறார்கள் என்றனர்.