இரத்மலானையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் விளைவித்ததுடன் ,மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீட்டு உபயோகப் பொருட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (25) மாலை இரத்மலானையில் , கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான இவர், பாராளுமன்ற உறுப்பினர் அபேகுணவர்தனவின் இல்லத்தில் இருந்து நான்கு வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் டிராகன் லைட் ஒன்றை திருடியுள்ளார் மேலதிக விசாரணைகளை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது போராட்டக்காரர்களை தாக்கிய நபர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 5 பஸ்களை தாக்கி சேதப்படுத்திய நபர் ஒருவர் மாலபேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான குறித்த சந்தேக நபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோவின் தனிப்பட்ட வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த நபர் ,தங்கொடுவ பொலிஸாரினால் நேற்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் 45 வயதானவர் எனவும் அவர் தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தொடுவாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான அவர் கிரேஸ்லேண்ட் வத்தையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.