புதுடெல்லி: தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனர்களை கட்டாயப்படுத்துவதாக வாட்ஸ் அப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்று கொள்ளாத பயனர்களின் கணக்கு, பிப்ரவரி 8ம் தேதிக்கு பின் நீக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்தது சர்ச்சையானது. இதனிடையே, இதன் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் வாட்ஸ் அப் பகிர்வதாக குற்றம்சாட்டிய பயனர்கள், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறினர்.
வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்ற தீவிர நோக்கத்தில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. ‘ஏற்றுக்கொள் அல்லது வெளியேறு’ என பயனர்களை எச்சரித்து, தனது கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக செயல்படுகிறது.
புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனர்களுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பி கட்டாயப்படுத்துகிறது. இது இந்திய போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது,’ என்று நீதிபதிகள் கண்டித்தனர்.