புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விலகி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இதனிடையே, காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், விரைவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“தேசிய கட்சி தொடங்குவதில் எனக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை, ஆனால் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதை மனதில் வைத்து, விரைவில் அங்கு ஒரு பிரிவை தொடங்க முடிவு செய்துள்ளேன்” என்று புதிய கட்சி தொடர்பாக பேசியுள்ளார் ஆசாத். தொடர்ந்து பேசியவர், “கட்சியில் இருந்து விலகும் முடிவைப் பற்றி நான் நீண்ட காலமாக யோசித்து வந்தேன். அதிலிருந்து பின்வாங்க முடியாது” என்றார்.