மதுரை: “போன் உரையாடலை மிமிக்ரி செய்து பரப்பிய முன்னாள் பாஜக நிர்வாகி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதுரை காவல் ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுரை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரனும் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இது குறித்து மதுரை மாவட்ட, மாநகர (பொறுப்பு) பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில், “சமூக வலைத்தளத்தில் நானும், எங்கள் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பேசியதாக டப்பிங், மிமிக்ரி, எடிட்டிங் செய்து, சில தகவலை ஊடகத்தில் பதிவிட்டு விவாதமாக்கி உள்ளனர். என் மீதும், மாநிலத் தலைவர் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.
வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்த மாநில தலைவர் திருச்சியில் இருந்து வந்தார். மதுரை ரிங் ரோட்டில் அவரை வரவேற்றேன். என்னை அவரது காரில் ஏற்றிக் கொண்டார். விமான நிலையம் நோக்கி சென்ற போது, முன்னாள் பாஜக தலைவர் சரவணன் மாநிலத் தலைவர் போனிற்கு மிஸ்டு கால் கொடுத்தார். அவரது நேர்முக உதவியாளர் பிரபா போனில் பேச சொல்லி விவரம் கேட்டார்.
அப்போது, ஓபன் மைக் போட்டு, மாநில தலைவர் பேசும்போது, எதிர் முனையில் பேசிய சரவணன் தானும், நிர்வாகிகளும் விமான நிலையம் வந்துவிட்டோம் என்றார். பிறகு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், என்னை நோக்கியும், பொது மக்களை பார்த்தும் உங்களை யார் அனுமதித்தது. வெளியே போங்க என்றும், மாநிலத் தலைவர் வருகிறார் என்றபோதிலும், அவருக்கு யார் அனுமதி கொடுத்தது எனவும் அமைச்சர் கூறியதாக சரவணன் தெரிவித்தார்.
அப்படியானால் நீங்கள் அஞ்சலி செலுத்துங்கள் என மாநிலத் தலைவர் கூறினார். அப்போது, போனை ஆஃப் செய்யாமல், லட்சுமணன் வீட்டுக்கு சென்று அஞ்சலி நாம் செலுத்துவோம் என என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். இதற்கிடையில் சரவணன் மீண்டும் போனில் பேசி, அங்கு வேண்டாம் அனுமதி வாங்கிவிட்டேன். நீங்கள் இங்கு வந்தால் அஞ்சலி செலுத்திடலாம்” என அழைத்தார்.
அப்போது, அமைச்சர் தியாகராஜன் உண்மைத் தன்மையை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, அவரது பொய்யான முகத்திரை காட்டி, வேறு லெவலில் அரசியல் பண்ணுவோம் என மாநிலத் தலைவர் கூறினார். இதன்பின் நானும், மாநிலத்தலைவரும் விமான நிலையம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினோம்.
வெளியில் என்ன நடந்தது என தெரியாது. எவ்விடத்திலும், நானும், மாநிலத் தலைவரும் போனில் உரையாடவில்லை. அவருடன் செல்லும்போது போனில் பேசியதாக கூறுவது உணமைக்கு புறம்பானது. மக்கள் பணி செய்யும் தலைவர்களை அசிங்கப்படுத்தி, அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே போன் உரையாடலை டப்பிங், மிமிக்ரி செய்து விட்டர், பேஸ்புக், யூடியூப் களில் பரப்பி குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
எனது அலைபேசி எண், மாநில தலைவர், அவரது உதவியாளர், சரவணன் ஆகியோர் அலைபேசி எண்களை ஆய்வு செய்தால் உண்மை தெரியும். சரவணன் வேண்டுமென்றே சதி செய்து, ஆட்களை சேர்த்து இணையதளத்தில் வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டுள்ளார். குற்றச் செயல் புரிந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் கூறுகையில், ”அமைச்சர் கார் மீது தாக்குதலில் திமுக அரசு அவசர பிரகடனம் போன்று செயல்படுகிறது. இது தொடர்ந்தால் மதுரையிலுள்ள 2.50 லட்சம் பாஜக தொண்டர்களை திரட்டி போராடுவோம். தினமும் 1000 போலீசாருக்கு வேலை தருவோம். சரவணன் அலைபேசி ஆய்வு செய்தால் முழு உண்மை தெரியும். அவரது ஊழலை பாதுகாக்கவே ஆளுங்கட்சி ஆதரவாக அவர் செயல்படுகிறார்” என்றார்.
பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் கூறும்போது, ”சரவணன் மூலமே பாஜகவில் இணைந்தேன். அதற்காக அவருடன் அவ்வப்போது பேசுவேன். நான் தவறாக பேசியதாக வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மாநில தலைவருக்கு எதிராக அவர் செயல்பட்டால் அவரது மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்துவோம்” என்றார்.