வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம் இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளன என்பது குறித்து விவசாயிகளிடமும் கிராம மக்களிடமும் எடுத்துரைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட 15 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாய இடுபொருட்கள், தார்ப்பாய், தென்னங்கன்று, தானிய விதை வகைகள், நெல் விதைகள் உள்ளிட்டவைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி அலுவலர் பரமன், உதவி தோட்டக்கலை அலுவலர் தணிகைவேல், வேளாண் பொறியியல் துறை அலுவலர் பரிமளா உட்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.