வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா

வாஷிங்டன்,

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் போராக வெடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. மிக குறுகிய காலத்தில் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்து விடலாம் என கருதி ரஷியா போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவின்றி நீண்டு கொண்டு இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 6 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு ஏதுவாக உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வாரி வழங்கி வருகிறது. இதனிடையே உக்ரைன் படைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து துல்லியமாகத் தாக்குதல் நிகழ்த்த ரஷியா டிரோன் விமானங்களை அதிகளவில் பயன்படுத்திவருகிறது.

இந்நிலையில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் கூட எளிதாக எடுத்துச் சென்று ரஷிய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன வாம்பயர் (VAMPIRE) ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா வழங்கிய ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் ராணுவம் ரஷிய டிரோன்களை, சுட்டு வீழ்த்திவந்த நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக அதைவிட அதிநவீன வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை அமெரிக்கா வழங்க உள்ளது.

சிறிய சரக்கு வாகனத்தில் கூட எளிதாக நிருவப்படக்கூடிய இந்த ராக்கெட் லாஞ்சரில், ஒரே சமயத்தில் 4 ஏவுகணைகளைப் பொருத்தி, லேசர் தொழில்நுட்பம் மூலம் வான் மற்றும் நிலத்தில் உள்ள இலக்குகளை வேகமாக நகர்ந்தபடியே துல்லியமாகத் தாக்க முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.