இம்பால்,
20 அணிகள் இடையிலான 131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இம்பாலில் நேற்று பிற்பகலில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஐ.எஸ்.எல். சாம்பியனான ஐதராபாத் எப்.சி.யுடன் (சி பிரிவு) மோதியது.
முதல் பாதியில் கோலோச்சிய சென்னையின் எப்.சி. அணி 42-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணி கேப்டன் அனிருத் தபா இந்த கோலை அடித்தார். இதனால் சென்னை அணி முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
54-வது நிமிடத்தில் சென்னை வீரர் டியாக்னே கோல் எல்லையில் பந்தை கையால் தடுத்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் சென்னை அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டி இருந்தது. அத்துடன் ஐதராபாத் அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஜோ விக்டர் பதில் கோல் திருப்பினார்.
தொடர்ந்து ஐதராபாத் அணியின் பார்த்தோலோம் ஆக்பிச் 64-வது மற்றும் 74-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் போட்டு அணி வலுவான நிலையை எட்ட வைத்தார். முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்தது. ராணுவ ரெட் அணியுடன் டிரா கண்டு இருந்த சென்னை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.