பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிறப்பு நிதி ஒதுக்கீடு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நான் பெருமையுடன் இணைந்து கொண்டுள்ளேன். அது தேசபக்தி கொண்ட பெிய அமைப்பு. ஆனால் சித்தராமையா எந்த அமைப்புடன் இணைந்துள்ளார். கர்நாடகத்தில் பின்தங்கிய சமூகங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உள்ளன. அவர்களுக்கு இன்னும் உரிய நீதி கிடைக்கவில்லை. அந்த சமூகங்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
அந்த நிதி மூலம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனது சுதந்திர தின உரையில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் கல்வி உதவித்தொகை திட்டத்தை விஸ்தரிப்பதாக அறிவித்தேன். விவசாய கூலிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளேன். தோட்டக்கலை, மீன்வளம், ஆடு மேய்ப்பவர்கள், கைவினை பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அர்க்காவதி லே-அவுட்
மந்திரிசபை கூட்டத்தில், சித்தராமையா ஆட்சி காலத்தில் அர்க்காவதி லே-அவுட் அமைக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவது குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. அதற்கு பதிலாக, 40 சதவீத கமிஷன் விவகாரத்திற்கு எவ்வாறு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.