ஆத்தூர்: ஆத்தூரில், டோக்கன் கொடுத்து விட்டு இலவச வேட்டி-சேலை வழங்காமல் ஓட்டம் பிடித்த பாஜ நிர்வாகிகளை, பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில், பாஜ சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே நேற்று நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநில பட்டியலின பிரிவு துணைத்தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்குவதாக கூறி, அதற்காக பாஜ கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நிர்வாகிகள் பேசி முடித்தவுடன், பெயரளவிற்கு 10 பேருக்கு வேட்டி- சேலைகள் வழங்கி விட்டு, மேடையை விட்டு இறங்கிய நிர்வாகிகள், காரில் ஏறிச்செல்ல முயன்றனர். ஆனால், டோக் கன் வாங்கிய 100க்கும் மேற்பட்டோர், வேட்டி- சேலை கிடைக்காத அதிர்ச்சியில் நிர்வாகிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பாஜ நிர்வாகிகள், பாதுகாப்பிற்கு இருந்த போலீசாரை அழைத்து இலவச வேட்டி- சேலை கேட்டு டோக்கன்களுடன் முற்றுகையிட்டவர்களை அப்புறப்படுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அதன் பேரில், அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, பாஜ நிர்வாகிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.