கொழும்பு: சீன உளவு கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருக்கும் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு சீன ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையும் யுவான் வாங்-5 கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.
மேலும், இலங்கை துறைமுகத்துக்கு கப்பல் வருவதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இலங்கை அரசு திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு சீன உளவு கப்பலுக்கு திடீரென அனுமதி தந்தது.
அந்தக் கப்பல் கடந்த 16-ம் தேதி ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது. கடந்த 22-ம் தேதி ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் இருந்து கிளம்பிச் சென்றது. இதையடுத்து அந்த கப்பல் நேரடியாக சீனாவில் உள்ள ஜியாங்யின் துறைமுகத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் இந்த உளவு கப்பல் எதிரி நாடுகளின் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
இதனால் இந்திய ஏவுகணை சோதனைகள் குறித்த தகவல்கள், ரகசியங்கள் சீனாவுக்குச் செல்லும் ஆபத்து உள்ளதால் சீனாவின் கப்பல் நடமாட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன் காரணமாகவே கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தது.
இந்தியா அதிருப்தி
இலங்கையின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தளங்கள் குறித்த தரவுகளைச் சீனா சேகரிக்கும் ஆபத்து உள்ளதாக இந்தியா அதிருப்தி தெரிவித்தது.
இதனிடையே ஹம்பந்தோட்டாவில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே டோன்ட்ரா பகுதி அருகே 400 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் நிலைகொண்டு ஆய்வுசெய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்தக் கப்பல் ஜியாங்யின் துறைமுகத்துக்குச் செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்துக்குச் செல்லுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.