புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சகத்தில் ஆண் இன்ஜின் டிரைவர்களைப் போலவே, ஏராளமான பெண் இன்ஜின் டிரைவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பணி நேரத்தின்போது போதுமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பெண் இன்ஜின் டிரைவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவில் கழிப்பறைகளை அமைக்க சாத்தியம் இருப்பது தெரிந்தால் அவற்றை அமைப்போம். ரயில்வேயில் 1,000-த்துக்கும் மேற்பட்ட பெண் இன்ஜின் டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்” என்றார்.