வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், விநாயகா் சதுா்த்தியை அமைதியாகக் கொண்டாடுவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,
“கடந்த காலங்களில் விநாயகா் சதுா்த்தியின்போது எந்தெந்த இடங்களில் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டதோ, அதே இடங்களில்தான் சிலைகள் வைக்கப்பட வேண்டும். புதிய இடங்களில் சிலைகளை வைக்கக் கூடாது. தீயணைப்புத் துறை அனுமதி அவசியமாகும். ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குடியிருப்பின் அருகே சிலைகள் வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் இருந்தும், மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடம் இருந்தும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டால் நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்தும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள் 5 அடி உயரத்தில் இருந்து 20 அடி உயரத்தில் இருக்க வேண்டும். மேலும், விநாயகா் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும், இதனை தொடர்ந்து விழாக்குழு சாா்பில் விநாயகர் சிலைகளை பாதுகாப்பதற்காக சிலைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், பதற்றமான பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்படும்”. என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், காசிமேடு, எண்ணூா், திருவொற்றியூா், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா் உள்ளிட்ட இடங்களில் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.