'ஆட்சியில் எந்த தலையீடும் இல்லை; சுதந்திரமாக செயல்படுகிறேன்!' – முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக மாநில அரசில் எந்த தலையீடும் இல்லை என்றும், சுதந்திரமாக செயல்பட கட்சி மேலிடம் அனுமதி வழங்கி உள்ளது என்றும் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா, வயது மூப்பு காரணமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக, பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்.

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஓராண்டாகி உள்ளது. இவர் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து மாநிலத்தில் வகுப்பு வாத பிரச்னைகள், மதக் கலவரங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையே, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது பாஜக மூத்தத் தலைவர்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும், அவர் விரைவில் மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியது. இந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்த பாஜக டெல்லி மேலிடம், 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலேயே பாஜக எதிர்கொள்ளும் என தெரிவித்தது. இதை அடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

எனக்கு, பி.எஸ்.எடியூரப்பா ஒரு இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு மக்கள் தலைவர். எனக்கு ஆட்சி செய்ய உதவுவதே அவரது பங்கு. எனது அன்றாட விவகாரங்களில் பி.எஸ்.எடியூரப்பா தலையிடுவதில்லை. மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் பெரிய அளவில் சட்ட விரோத மதமாற்றங்கள் நடக்கின்றன. அதை தடுப்பதற்காகவே மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. என் எம்.எல்.ஏ.வின் தாயார் கூட கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. ஊழல் குற்றச்சாட்டுகளை கூறும் ஒப்பந்ததாரர்கள் காங்கிரஸ் கட்சியால் ஆதரிக்கப்படுகின்றனர். தார்மீக அடிப்படையில் அமைச்சர் பதவியை கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜினாமா செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.