ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தாமதிக்கவில்லை என்று விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி இன்று (ஆகஸ்ட் 27) காலை தாக்கல் செய்தார். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையை தாக்கல் செய்தபின்னர் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆறுமுகசாமி, “சாட்சிகளை விசாரிப்பதில் நான் எவ்வித தாமதமும் செய்யவில்லை. 154 பேரிடம் விசாரணை நடத்தினோம். ஒவ்வொருவரிடமும் விரிவாக விசாரணை நடத்தியுள்ளேன். விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை தரப்பும் சரி, சசிகலா தரப்பும் சரி முழு ஒத்துழைப்பு தந்தார்கள். சசிகலா விசாரணைக்கு நேரில் வரமுடியாது என கடிதம் கொடுத்தார். அதனால் அவரிடம் கடிதம் மூலம் சாட்சியம் பெற்றோம். எய்ம்ஸ் மருத்துவமனை 6 அறிக்கைகளைக் கொடுத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் அறிக்கை ஜெயலலிதா மறைந்து 3 மாதங்களுக்குப் பின்னரே கிடைத்தது.
ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் போயஸ் கார்டன் வீட்டில் எந்த விசாரணையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மற்றபடி ஜெயலலிதாவின் உடல் நிலை எப்படி இருந்தது. அவர் உடல்நிலையைப் பேண என்னென்ன செய்தார். அவரை யார் வீட்டில் கவனித்துக் கொண்டது போன்று எல்லா விஷயங்களையும் விசாரித்து அறிக்கையில் சேர்த்துள்ளோம்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை வழங்குவது மட்டுமே என் பணி அதனை செய்துவிட்டேன். அதனை வெளியிடுவது அரசின் முடிவு.
அறிக்கையில் நான் எனது தனிப்பட்ட கருத்துகளை சேர்க்கவில்லை. சாட்சியங்கள் குறிப்பிட்டவற்றை தான் அதிகமாக சேர்த்துள்ளேன். அதேபோல், எத்தனையோ விசாரணைக் கமிஷன்கள் இதுவரை அமைக்கப்பட்டிருந்தாலும் கூட எனது விசாரணைக் கமிஷனின் மீது மட்டும் அதிக செலவு தொடர்பான சர்ச்சைகளைக் கிளப்பியது தேவையற்றது” என்று கூறினார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல்: விசாரணை அறிக்கை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை மறுநாள் (ஆக.29) அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.