கனடா நாட்டின் ஹேலிஃபாக்ஸ் நகரில், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் 65-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஓம் பிர்லா தலைமை வகிக்க, அனைத்து மாநில சபாநாயகர்களும் இந்திய தேசியக் கொடியைக் கையிலேந்தியபடி பேரணி சென்றனர். இந்த நிலையில், சபாநாயகர்கள் ஏந்தியிருந்த தேசியக் கொடியில் “மேட் இன் சைனா” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஏற்கெனவே, பலவருடமாக இந்திய சுதந்திர தின நிகழ்வுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கதர் துணியாலான தேசியக் கொடியைப் பயன்படுத்திவந்த நிலையில், இந்த ஆண்டு சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளைப் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்வழங்கியிருந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் பலவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் நடந்த இந்த சம்பவமும் தற்போது அத்தகைய சர்ச்சையையே கிளப்பியிருக்கிறது.
மேலும் இதுகுறித்து மாநாட்டில் தமிழ்நாடு சார்பாகக் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, “இந்திய தேசியக் கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என இருந்ததைக் கண்டு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அதைப்பற்றி சொன்னவுடனே அவர் சிரித்துக் கொண்டார். ஆனால் எல்லோருக்கும் கஷ்டம் இருந்தது. சீனாவிலிருந்து இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை” எனத் தனியார் செய்தித் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.