மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்து, மருத்துவக் கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கியதோடு, 236 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர்

வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (27.8.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 65.60 கோடி ரூபாய் செலவில் இம்மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட இருநூறு நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், 63.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்து, 65.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவச் சேவை வண்டிகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நல வாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48 போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை, 1918-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த மருத்துவமனை, ஆசியாவிலேயே நிறுவப்பட்ட முதல் கண் மருத்துவமனையாகும். இம்மருத்துவமனை 2019-ஆம் ஆண்டில் இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்தது. சராசரியாக 300 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இம்மருத்துவமனையில், தினமும் சராசரியாக 600 முதல் 800 நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போது 478 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும், இம்மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் 600 முதல் 700 கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. கண் தானத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும், 40 ஜோடி கண்கள் தானமாக பெறப்படுவதுடன், சுமார் 20 கண்கள் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போதுள்ள மருத்துவமனைக் கட்டடம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், 65.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடத்தில் 150 படுக்கை வசதிகளுடன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கருவிழி சிகிச்சை பிரிவு, கண்குழி சிகிச்சை பிரிவு, விழித்திரை சிகிச்சை பிரிவு, உள் கருவிழி சிகிச்சை பிரிவு மற்றும் கண் நரம்பு இயல் மாற்றுக்கண் சிகிச்சை பிரிவு போன்ற சிறப்பு கண் சிகிச்சைக்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சார்பில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான டெலி கோபால்ட் இயந்திரம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 5.73 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீவிர மூளைக் காய்ச்சல் நோய்க்கான ஆய்வகம் மற்றும் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 7.75 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள 18 மின்தூக்கிகள்;

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூர் வளாகத்தில் உள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக பயிற்சி மையக் கட்டடம், இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் துணை செவிலியர் பயிற்சி பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது மற்றும் 3-வது தளத்தில் துணை செவிலியர் பயிற்சி பள்ளிக் கட்டடம், திருவாரூர் மாவட்டம், ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல பயிற்சி மையக் கட்டடம்;

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் விருதுநகர் மாவட்டம் – சிவகாசி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்டம்- கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய 7 அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 9 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள RT-PCR ஆய்வகங்கள்,

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில் 10 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைநலக் கட்டடம் மற்றும் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்,

மருந்து கட்டுப்பாடு துறையின் சார்பில் மதுரை மாவட்டம், மேலக்குயில்குடியில் 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள உலகத் தரம் வாய்ந்த மருந்து பரிசோதனை ஆய்வகம், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் மற்றும் நடமாடும் குழு அலுவலகக் கட்டடம் என மொத்தம் 129 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவத்துறைக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் இடமாற்றத்தை எளிதாக்கும் வகையில் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்ட்ரெச்சருடன் கூடிய பேட்டரி கார்கள், 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு குறைப் பிரசவ இறப்பைக் குறைக்க 15 கோடி ரூபாய் மதிப்பிலான 150 பிறந்த குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கு 49 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய உயர்நிலை வண்ண அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் (New High End Colour Ultra Sound Machines), என மொத்தம் 65 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவச் சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பொது சுகாதாரத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 76 மருந்தாளுநர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 திறன்மிகு உதவியாளர் நிலை-II மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் கருணை அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர், ஒரு ஊர்தி ஓட்டுநர், என மொத்தம் 236 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் ஸ்டாலின் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.