புதிய கட்சி தொடங்குவது குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ள குலாம் நபி ஆசாத் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இந்த ஆதரவாளர்களுடன் குலாம் நபி ஆசாத் புது கட்சியை எப்போது அறிவிப்பது என்பது குறித்து தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் முழு கவனம் செலுத்தும் என்று இந்த ஆலோசனைகளில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக தேசிய அரசியலிலும் தனது புதிய கட்சி களமிறங்க வேண்டும் என குலாம் நபி ஆசாத் விரும்புகிறார்.
இதற்கிடையே பல காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாதுடன் தொடர்பில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் G23 என அழைக்கப்படும் அதிருப்தி குழுவை சேர்ந்தவர்கள் என குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சசி தரூர், மனிஷ் திவாரி, ஆனந்த் சர்மா உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். வாரிசு அரசியல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத முடிவுகள் என பல்வேறு குறைபாடுகளை காங்கிரஸ் கட்சி களைய வேண்டும் என G23 என அழைக்கப்படும் இந்த அதிருப்தி தலைவர்கள் குழு வலியுறுத்தி வருகிறது.
மேலும் விரைவில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்தலில் G23 கோஷ்டியை சேர்ந்த ஒருவர் போட்டியிட வேண்டும் என அதிருப்தி தலைவர்கள் ரகசியமாக திட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியதால் இவர்கள் தங்களுடைய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், முன்னாள் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர். முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதேன் பிரசாதா, மற்றும் ஆர்பிஎன் சிங் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், வேறு எந்த கட்சியிலும் இணையாமல் குலாம் நபி ஆசாத் தனி கட்சி நடத்த வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் சரத் பவார் மற்றும் அவரைப் போலவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி நடத்தி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைப் போல செயல்படுவது தற்போதைய அரசியல் சூழலில் சரியான நிலைப்பாடாக இருக்கும் என குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இதன் அடிப்படையில் விரைவிலேயே புது காட்சி குறித்து குலாம் நபி ஆசாத் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
– கணபதி சுப்ரமணியம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM