ஜெ. மரணம் – முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது ஆணையம்

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154க்கும் மேற்பட்டோரிடம்  ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாள்கள் முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு அளித்த அவகாசம் கடந்த 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 23ஆம் தேதி இரவு கோவை புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் சுற்றுப்பயணத்தால் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

 

இந்நிலையில், சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி இன்று நேரில் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்பட்டது தொடர்பான 600 பக்கங்களை கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். 

அப்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த அறிக்கையானது ஐந்து வருடங்களுக்கு பிறகு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.