செப். 10ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும். மேலும், அக்டோபர் 13 முதல் 15 வரை 3ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29 முதல் 31 வரை 4ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும்.

கலந்தாய்வில் சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாடு அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி இணையதளம் வாயிலாக துணை கலந்தாய்வு நடைபெறும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் பிரிவிற்கான கலந்தாய்வு நவம்பர் 19 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக நடைபெறும். கலந்தாய்விற்கான இறுதி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துணை வேந்தர்கள் மற்றம் கல்லூரி முதல்வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்களில் கல்லூரி கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அரசுக் கல்லூரிகளுக்கு எந்த அளவிற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பதை ஆராய்ந்து, அதனடிப்படையில் கலந்து ஆலோசித்து, கூடுதல் இடங்களை அதிகரிப்பது குறித்து 30 ஆம் தேதி மாலையே அறிவிக்கப்படும்.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும். அனைத்து பல்கலை கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தை கொண்ட தமிழ் மற்றும் ஆங்கில பாடம் நடைமுறைப்படுத்தப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் தமிழ் வழியில் பாடங்களை படிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. பொறியியல் வகுப்புகள் தொடங்குவது குறித்து செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.