2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ், கடைசியாக நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியடைந்திருந்தது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே பேச்சுக்களும் எழுந்தது. தற்போது அதற்கான வேலைகளும் நடைபெற்றுவருகிறது. மேலும் தேர்தலில் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒருபுறம், 2019-ம் ஆண்டு தேர்தலின் தோல்வி காரணமாகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி, மீண்டும் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மறுபுறம், கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் வெளிப்படையாகக் கூறிவருகிறார். இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக தனியார் ஊடகத்திடம் நேற்று பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “கட்சியை வழிநடத்த விரும்பும் எவரும், நாடு முழுவதும் அறியப்பட வேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர், மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர் முழு காங்கிரஸ் கட்சியினராலும் நன்கு அங்கீகரிக்கப்பட்டவராகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் இருக்க வேண்டும். எனில் மாற்று வழியை நீங்கள் கூறுங்கள்.
ராகுல் காந்தியைத் தவிர கட்சியில் வேறு யார் இருக்கிறார்கள். நாங்கள் அவரைக் கேட்போம். காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்குமாறு அவரை கட்டாயப்படுத்துவோம். அவருக்குப் பின்னால் நாங்கள் நிற்கிறோம். மேலும் நாங்கள், அவரைத் தொடர முயற்சிப்போம்” என்று கூறினார்.
காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான தேதி அறிவிப்பு நாளை நடைபெறும், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்படலாம்.