தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்! ராமதாஸ் கண்டனம்!!

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் அவுட்சோர்சிங் முறையை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதற்கு,  பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த முடிவை கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவுட்சோர்சிங் என்பது ஒரு மின்வணிக நிறுவனம்/ மற்றொரு நிறுவனத்தை பணியமர்த்தும் ஒரு செயல்முறை. இதன் பணியானது, தற்போது நிறுவனத்தில் பணியாற்றி வரும் சொந்த ஊழியர்களைப் பயன்படுத்தாமல், வெளியாட்கள் மூலம்  செயல்பாட்டை கவனித்துக்கொள்வது.  இது “அவுட்சோர்சிங்” என்று அழைக்கப்படுகிறது, தற்காலத்தில் இந்த முறை  பல ஆன்லைன் வணிகங்களுக்கு வசதியான சேவையாக மாறி உள்ளது.

ஆனால், தனியார் மயத்தை எதிர்த்து அரசியல் செய்யும் திமுக அரசு, போக்குவரத்து கழகத்திற்கு ஊழியர்களை பணியமர்த்தும் பணிக்கு அவுட்சோர்சிங் முறையை கையாளுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தனியார் நிறுவனம் சம்பாதிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக பறிக்கும் இந்த முறை கண்டிக்கத்தக்கது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பில், ‘‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 13-ஆம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இது போக்குவரத்து பணியாளர்களை எந்த உரிமையும் இல்லாத கொத்தடிமையாக மாற்றும் நடைமுறையின் முதல் படியாகும். இதை அனுமதிக்க முடியாது.இந்த புதிய நடைமுறையின்படி ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம், விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 400 ஓட்டுநர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும். நிரந்தர ஓட்டுனர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதை விட குறைவான ஊதியத்தை 400 பேருக்கும் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வழங்கும். அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும்.

இது தொடக்க நிலை நிரந்தர ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது. சுருக்கமாக கூற வேண்டுமானால், இப்போது அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் இனி அமைப்பு சாராத தினக்கூலி தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள்.

இது போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் செயல் ஆகும்.தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத் துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த முறை திணிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை பணியாளர்களின் உரிமையாளராக அரசு தான் இருக்க வேண்டும். மாறாக, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கக் கூடாது. தொழிலாளர்களை காக்க வேண்டிய அரசு அவர்களை கைவிடக்கூடாது.

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அதன் நிர்வாகமே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரந்தர ஓட்டுநர்களை நியமித்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஓட்டுநர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதை தவிர்க்கவே இத்தகைய குறுக்குவழியை விரைவுப் போக்குவரத்துக் கழகம் கையாள்கிறது. இதை போக்குவரத்துத்துறை கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதன் அதிகாரிகள் இதை கண்டும் காணாமலும் இருப்பது, உழைப்புச்சுரண்டலுக்கு துணை போவதாகவே பொருள்.

முந்தைய அதிமுக ஆட்சியிலேயே இந்த அவுட்சோர்சிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7 அல்லது 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கிவிடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’ முறையில் தாண்டவமாடுகிறது’’ என்று விமர்சித்திருந்தார். முதல்வரால் விமர்சிக்கப்பட்ட நடைமுறையையே அவரது ஆட்சியில் திணிக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் முயல்வது எந்த வகையில் நியாயம்?

விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக மாறி, ஒரு காலத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மட்டும் தான் அனைத்துத் துறைகளிலும் பணியில் இருப்பார்கள். அத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுநர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்; அதற்கு பதிலாக அனைத்து உரிமைகளுடன் கூடிய நிரந்தர ஓட்டுநர்களை அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.