ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியாக, அனைத்து எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க, அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, 30 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு, 18 உறுப்பினர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், அதிகாரத்தை பயன்படுத்தி, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது பெயரில் நிலக்கரி சுரங்க உரிமை பெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், எம்எல்ஏ பதவியில் இருந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பைஸூக்கு பரிந்துரை செய்தது.
இந்த விவகாரத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் ரமேஷ் பைஸ் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான உத்தரவு கடிதத்தை, அவர் விரைவில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், சொந்த கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சியாக, அனைத்து எம்எல்ஏக்களையும், குந்தி என்ற இடத்தில் சொகுசு விடுதியில் தங்க வைக்க, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 30 கிலாே மீட்டர் தொலைவில் உள்ள குந்தி என்ற இடத்திற்கு 3 சொகுசு பேருந்துகளில், எம்எல்ஏக்கள் தங்களது உடைமைகளுடன் சென்றுள்ளனர். இதற்கிடையே, மேற்கு வங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு, எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை, எம்எல்ஏ பதவியில் இருந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் முதலமைச்சராக தொடர முடியும். எனினும், அடுத்த ஆறு மாதங்களுக்குள், ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்ட விதி.