மயிலாடுதுறை: சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து, பாதுகாத்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்கு சரணாலயம் மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வண்ணம் மின்வேலி மற்றும் மின் தடுப்புகளை வைப்பது வழக்கம். இதனால் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருக்கும் வனப் பணியாளா்களுக்கும், வன உயிரினங்களுக்கும் உயிா்ச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட நெற் பயிர்களை, காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைப்பதும் உண்டு.
மின் வேலிகள்
மின் வேலி அமைத்தல், கம்பி வலைகள் உள்ளிட்ட தடுப்புகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து வந்தாலும், வனப்பகுதிகளில் உள்ள சில கிராமங்களில், விவசாயிகள் மின்வேலி அமைத்து தங்களது விளை நிலங்களை பாதுகாத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து ஒரு மூதாட்டி பாதுகாத்து வந்துள்ளார். ஆனால், பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்புக்காக ஏற்பாடுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசனே தெருவை சேர்ந்தவர் அன்பழகி என்ற மூதாட்டி, சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில், குழந்தைகள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார்.
மின் இணைப்பை துண்டிக்கவில்லை
இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம்போல் மின் இணைப்பு கொடுத்து விட்டு தூங்கிய அன்பழகி, இன்று காலை மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் அன்பழகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தேவையற்ற செயல்
வெகு நேரம் கடந்தும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோதுதான் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் இருந்த சீர்காழி போலீசார் அன்பழகியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து பாதுகாத்து வந்த மூதாட்டி, அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை தவிர்ப்பது சரியானது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.