சென்னையைச் சேர்ந்த சமந்தா தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்த அவர் திருமணம் செய்துகொண்டார். சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் தங்களுக்கு பரஸ்பரமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் இருவரது ரசிகர்களுமே அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவாகரத்தால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை பாதாளத்திற்கு செல்லும் என பலர் கூறினர்.
ஆனால், திருமண பந்த முறிவுக்கு பிறகு சமந்தாவின் கிராஃப் உச்சம் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த அவர் புஷ்பா படத்தில் பாடல் ஒன்றுக்கும் நடனமாடினார். அவரது நடனத்தாலேயே உம் சொல்றியா மாமா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. தமிழ், தெலுங்கு, பாலிவுட் என ரவுண்ட் கட்டி அடிக்கும் சமந்தா அடுத்ததாக ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இதற்கிடையே காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா தனது விவாகரத்து குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார். இந்நிலையில் பாடகி சின்மயி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்களுக்கு வீட்டில் உறுதுணையாக இருப்பது கணவரும் கணவர் வீட்டை சேர்ந்தவர்களும்தான். ஆனால் வீட்டில் கணவனைவிட பெண் அதிகமாக சம்பாதிக்கிறார் என்றாலும், அதிக பிரபலமாகிறார் என்றாலும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சல் உருவாகிறது. இதனால் பெண்களுக்கு வீட்டில் நிம்மதி கிடைப்பதில்லை. பெண்கள் எப்போதும் தங்களின் கனவுகளை தொலைத்துவிடும் நிலையில் இருக்கிறார்கள். அப்படித்தான் இந்திய கலாசாரம் உள்ளது.
ஆனால் சமந்தாவை பொறுத்தவரை அவர் கடந்து வந்த பாதை, அவருடைய தைரியமும் தன்னம்பிக்கையும் எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டும்.சமந்தா ஹாலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பணியாற்ற உள்ளார். சமந்தா இன்னும் உயர வேண்டும், அவர் ஆஸ்கர் பெறுவதை நான் கைத்தட்டி ரசிக்க வேண்டும்” என்றார்.