14 நாட்களில் புதுக்கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத் – காஷ்மீர் தேர்தலுக்கு குறி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 14 நாட்களில், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக, அவரது நெருங்கிய ஆதரவாளர் ஜி.எம்.சரூரி தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என, பல பதவிகளை வகித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே நேற்று, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, குலாம் நபி ஆசாத் அறிவித்தார். மேலும், கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததற்கு, ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காரணம் என்று பகிரங்கமாக விமர்சித்தார்.

இவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து மூத்தத் தலைவர்கள் விலகி வருவது, மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், 14 நாட்களில், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக, அவரது நெருங்கிய ஆதரவாளர் ஜி.எம்.சரூரி தெரிவித்து உள்ளார். டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குலாம் நபி ஆசாத் தனது சொந்தக் கட்சியைத் தொடங்கத் தயாராகி விட்டார். கட்சியின் முதல் பிரிவு, ஜம்மு காஷ்மீரில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் தொடங்கப்படும். புதிய கட்சியைத் தொடங்குவதற்கு முன், குலாம் நபி ஆசாத் தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஜம்மு வருகிறார்.

குலாம் நபி ஆசாத் சித்தாந்த ரீதியாக மதச்சார்பற்றவர். அவர் பாஜகவின் விருப்பப்படி செயல்படுகிறார் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் காஷ்மீரின் முதலமைச்சராக 2005 ஆம் ஆண்டு நவம்பர் 2 முதல் 2008 ஆம் ஆண்டு ஜூலை 11 வரை பணியாற்றினார். அவரது ஆட்சியை பொற்காலமாக மக்கள் பார்க்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து ஜம்மு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதிக்கு முந்தைய ஜம்மு காஷ்மீர் நிலையை மீட்டெடுப்பது கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.