திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்; தெற்கு ரயில்வே குட் நியூஸ்!

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு, தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக வாரந்தோறும் வியாழக் கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக் கிழமைகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கம் கடந்த 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் விடுத்த கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், வண்டி எண்: 06030 திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வரை வியாழக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமார்க்கத்தில் வண்டி எண்: 06029 மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 2023 ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மாறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாவும் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.