“முதலீடு செய்யுங்கள்… இரட்டிப்பு செய்து தருகிறேன்" – ரூ.20 கோடி மோசடி செய்த இன்ஜினியர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், சி.ஏ படித்துவருகிறார். கடந்தாண்டு இவருக்கு வேங்கைவாசல், மாம்பாக்கம் பகுதியைப் பிரசன்ன வெங்கடேச பாலாஜி என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பாலாஜி, சர்வபொம்மனிடம் தான் சி.ஏ முடித்து, பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்துவருவதாகக் கூறியிருக்கிறார். தன்னிடம் பணம் கொடுத்தால், அந்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறியிருக்கிறார்.

சேலையூர் காவல் நிலையம்

இந்த ஆசை வார்த்தையில் மயங்கிய சர்வபொம்மன் அவரிடம் 70 லட்சம் வரை கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கி நீண்டநாள் ஆகியும் திரும்பத் தராமல் பாலாஜி ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து, சர்வபொம்மன் கடந்த ஏப்ரல் மாதம் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

இந்த விசாரணையில், பாலாஜி தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்து பெங்களூரு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பெங்களூரு விரைந்த போலீஸார் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவருவது தெரியவந்தது. மேலும், தற்போது நண்பர்களுடன் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது.

பிரசன்ன வெங்கடேச பாலாஜி

இதனையடுத்து, கேரளாவிலிருந்து கோவை வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்த பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் சேலையூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பாலாஜி, பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாகப் பலரிடமும் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து இரண்டு விலை உயர்ந்த கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.