இயக்குனரிடம் விழா மேடையிலேயே மன்னிப்பு கேட்ட ஹீரோ
மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் வினயன். தமிழில் விக்ரம் நடித்த காசி மற்றும் அற்புத தீவு உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போவதாக கூறியிருந்தார் வினயன். அதற்கேற்றார்போல் மோகன்லாலுடன் தனக்கு ஏற்கனவே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அவருடன் சந்திப்பு நிகழ்த்தி அந்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். ஆனால் மோகன்லால் மற்ற படங்களில் பிசியாக இருந்தது மற்றும் இடையில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் ஆகியவை காரணமாக அந்த படத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் ஹீரோவான சிஜு வில்சன் என்பவரை கதாநாயகனாக வைத்து 19ம் நூற்றாண்டு என்கிற வரலாற்று படத்தை இயக்கியுள்ளார் வினயன். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நாயகன் சிஜு வில்சன் மேடையிலேயே இயக்குனர் வினயனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் மேடையில் பேசும்போது, 'இந்த படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் வினயினிடமிருந்து போன் வந்தபோது என்னை ஏன் அழைக்கிறார் என நான் குழம்பிப் போனேன். எனக்கு அவருடைய முந்தைய படங்கள் நினைவில் வந்து சென்றன. இருந்தாலும் அவரை நேரில் பார்த்து பேசியதும் தான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. ஆரம்பத்தில் நான் அவரை பற்றி தவறாக நினைத்து விட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறினார்
அதைத்தொடர்ந்து இயக்குனர் வினயன் பேசும்போது, “சிஜூ வில்சன் மீது எந்த தவறும் இல்லை அவர் என்னுடைய ஆரம்ப கால படங்களான ராட்சச ராஜாவு அற்புதத் தீவு ஆகிய படங்களை மனதில் வைத்துக்கொண்டு அப்படி யோசித்துள்ளார் ஆனால் கடந்த எட்டு வருடங்களாக நான் பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. திரையுலகில் இருந்து விலகியும் இருந்தேன்.. அதனால் அது எல்லோருக்கும் இயல்பாக தோன்றக்கூடிய ஒன்றுதான்” என்று பெருந்தன்மையாக கூறி சிஜு வில்சனை சாந்தப்படுத்தினார்.