கோவையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை அல்லது அதனது உபயோகம் குறித்து தகவல் தெரிந்தும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால், பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் பலரும் கஞ்சா உபயோகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பாக எழுந்த புகார்களை அடுத்து, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநகர காவல் துறையினர் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகம் குறித்து தகவல் தெரிந்தும், காவல்துறையினருக்கு தெரிவிக்காத பட்சத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டம் போன்ற குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் எனவும், பள்ளித் தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் மீது குற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM