மேல்மலையனூர்: மேல்மலையனூரில் ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்றிரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனை தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ஏராளமானோர் தங்கள் குலதெய்வமாக கொண்டு நாள்தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மாதம் தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் உற்சவர் அம்மனை அமர வைத்து பூசாரிகள் பம்பை மேல தாளம் முழங்க தாலாட்டு பாடல்களை பாடி அம்மனை வழிபடுவர். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் பங்கு பெற்று அம்மன் அருளை பெறுவர். நேற்றைய ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை பக்தர்கள் குடை பிடித்து காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.