கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்கொடி தூக்கியதால், அவர் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு பதவியேற்றார்.
இந்த நிலையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் ஊழல் மண்டிக்கிடப்பதாக குற்றஞ்சாட்டி கர்நாடகாவில் உள்ள 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சங்கங்கள் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதற்கான வேலைகளை பாஜக அரசு இப்போதே தீவிரப்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே, அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பேச்சுகள் அடிப்பட்ட வந்த நிலையில், அது தொடர்பாக எந்த முடிவையும் பாஜக மேலிடம் எடுக்காமல் இருந்து வருகிறது. ஆளும் பாஜக அரசு மீது பரவலாக அதிருப்தி நிலவி வரும் நிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி, நடத்தப்படும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு எதிராக உள்ளன.
இந்த சூழலில், பாஜக அரசு மீது ஊழல் குற்றம் சாட்டி 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு சங்கங்கள் பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளதுடன், கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேலாண்மை சங்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உதவி பெறாத தனியார் பள்ளிகள் மேலாண்மை சங்கம் ஆகிய இரு சங்கங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குவதற்கு மாநிலக் கல்வித் துறை லஞ்சம் கேட்பது குறித்து பிரதமர் மோடி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாரபட்சமான, ஒத்துவராத, முரண்பாடான விதிமுறைகள் உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு மிகப்பெரும் ஊழல் நடப்பதாகவும், மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை எனவும் அக்கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பில் உள்ள பிரச்சினைகளை கேட்டு புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கல்வி அமைச்சகம் அலட்சியமாக செயல்படுகிறது. அதிகளவிலான முதலீட்டாளர்களை அனுமதித்து லாப நோக்கில் இயங்கும் பெரிய பள்ளிகளுக்கு அனுமதி அளித்து இரண்டு வெவ்வேறு பாஜக அமைச்சர்கள் கல்வியை வணிகமயமாக்கி விட்டனர். இது குறைவான கட்டணம் வசூலிக்கும் பட்ஜெட் பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையின் படிப்பிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு துவங்கியும், அரசு நிர்ணயித்த பாடப்புத்தகங்கள் இன்னும் பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பெற்றோர், மாணவர்களை பாதிக்காத வண்ணம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகள், ஒழுங்குமுறைகளை வகுப்பதில் கல்வி அமைச்சருக்கு அக்கறை இல்லை என கடிதத்தில் தெரிவித்துள்ள 13,000 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த இரண்டு சங்கங்கள், கர்நாடக கல்வி அமைச்சகத்தின் நலன்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளன.