மும்பை: எரிசக்தி உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கட்கரி தெரிவித்தார். சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் இன்று ‘தேசிய இணை-உற்பத்தி விருதுகள்-2022’ வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- சர்க்கரை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக ஆண்டுக்கு ரூ.15லட்சம் கோடி செலவிடுகிறோம்.
நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், நமது வேளாண் வளர்ச்சி வீதம் 12%-13%ஆக மட்டுமே உள்ளது. சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் தான் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்டமாக இணை உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும். எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்று செய்தால், விவசாயிகள் உணவுப்பொருள் சாகுபடியாளர்களாக மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் திகழ முடியும். இந்தாண்டில், நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது; பிரேசில் நாட்டின் நிலவும் சூழல் காரணமாக இதனைப் பயன்படுத்த முடியும். எனினும், எத்தனால் தேவை மிக அதிகமாக உள்ளதால், எத்தனால் உற்பத்தியை நோக்கி நாம் கவனம் செலுத்துவது அவசியம்.
கடந்த ஆண்டின் உற்பத்தித் திறன் 400 கோடி லிட்டர் எத்தனால் ஆக இருந்தது; எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். எனவே, எத்தனால் தேவையை கணக்கிட்டு, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உயிரி எத்தனால் மூலம் இயங்கக்கூடிய மின்சார உற்பத்தி குறித்து தொழிற்சாலைகள் திட்டமிடுவதற்கு இதுவே சரியான தருணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.