வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட போலீஸ்: துணை ஆணையர் விசாரிக்க உத்தரவு!

புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீதான புகாரை துணை ஆணையர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வி.சுதாகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடகு நகைகளை மீட்க வேண்டுமென கூறி தனது நண்பர் மோகன் 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றதாகவும், கடனை திரும்ப கேட்டபோது கவரிங் சங்கிலியை கொடுத்து ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் 2021 டிசம்பர் 20 ஆம் தேதி புகார் அளிக்க சென்றபோது. ஆய்வாளர் பீர் பாட்ஷா மற்றும் உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் புகாரை பதிவுசெய்ய ஒரு லட்சம் லஞ்சம் பெற தீர்மானித்து முன்பணமாக 25 ஆயிரம் கேட்டதாகவும், இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னரே புகாரை பெற்றதற்கான ரசீது மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

லஞ்சம் பெற்றதற்கான வீடியோ ஆதாரங்களுடன் ஜூன் 13ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த வழங்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீதான புகார் உண்மை என தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் சுதாகரின் லஞ்ச புகார் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.