சென்னை: விக்ரம் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கோப்ரா’ வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக் கேட்டுள்ளார்.
எகிற வைக்கும் கோப்ரா
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால், கடைசியாக அமேசான் ஓடிடியில் வெளியான ‘மகான்’ நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் முதன்முறையக மகன் துருவ் உடன் இணைந்து நடித்திருந்தார் விக்ரம். இந்நிலையில், வரும் 31ம் தேதி வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ படம், மீது விக்ரம் மிகப் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்.
பிரமாண்டமாக வெளியாகிறது
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து ‘கோப்ரா’ படத்தை இயக்கியுள்ளார். லலித் குமார் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மிருனாள் ரவி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக விக்ரம் பலவிதமான தோற்றங்களில் நடித்துள்ளது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
கோப்ரா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள்
‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களை சந்தித்து வருகிறது விக்ரம் அண்ட் டீம். கடந்த .23ம் தேதி திருச்சி, மதுரையிலும். 24ம் தேதி கோவையிலும் ரசிகர்களை சந்தித்து உரையாடினர். அதனைத் தொடர்ந்து 25ம் தேதி சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் கோப்ரா ட்ரெய்லரை ரிலீஸ் செய்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து நேற்று கொச்சியிலும், இன்று (ஆக 27) பெங்களூருவிலும் ரசிகர்களை சந்தித்தனர். இதனை அடுத்து நாளை ஐதராபாத்தில் ரசிகர்களை சந்திக்கின்றனர்.
ரசிகர்களிடம் மன்னிப்பு
இந்நிலையில், கோப்ரா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குநர் அஜய் ஞானமுத்து அதிகளவில் கலந்துகொள்ளாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து ரசிகர்கள் டிவிட்டரிலும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால், இயக்குநர் அஜய் ஞானமுத்து ரசிகர்களின் கேள்விக்கு உடனடியாக பதிலளித்துள்ளார். முதலில் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ள அவர், விரைவில் ரசிகர்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுதான் காரணமா?
மேலும், “கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், என்னால் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், என்னுடைய அமேசிங்கான கோப்ரா டீமில் இருந்து, விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி ஆகியோர் உங்களை சந்திக்கின்றனர்” என பதிலளித்துள்ளார். படம் வெளியாகும் முன்பே ரசிகர்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து மன்னிப்புக் கேட்டு கூல் செய்துள்ளது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது.