மூளைச்சாவு அடைந்தகாக அறிவிக்கப்பட்ட குழந்தை தானாக மூச்சு விடத்துவங்கியதால் அதிர்ச்சி.
மூளைச்சாவை உறுதி செய்வதற்கான பரிசோதனையை மீளாய்வு செய்யும் மருத்துவ அமைப்பு.
லண்டன் மருத்துவமனை ஒன்றில், பரிசோதனை மூலம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு குழந்தை, அதன் செயற்கை சுவாசத்தை நிறுத்துவது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு வாரங்களாக குழந்தை வென்டிலேட்டரில் இருந்த நிலையில், திடீரென ஒரு நாள், அது தானாக, சீராக சுவாசிப்பதை செவிலியர் ஒருவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்தது அவர் மட்டுமல்ல, அந்த குழந்தை இறந்ததாக சோதனைகள் மூலம் உறுதி செய்த பெண் மருத்துவரும்தான்.
இந்த விடயம் பிரித்தானியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், இறந்துவிட்டதாக தான் கூறிய குழந்தை தானாக மூச்சுவிடத் துவங்கியதால், தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த அந்த மருத்துவர், உண்மையில் நாங்கள் இறந்த ஒரு குழந்தையைத்தான் வென்டிலேட்டரில் வைத்திருந்ததாக எண்ணிக்கொண்டிருந்தோம், இதுவரை நாங்கள் யாரும் இப்படி ஒரு விடயத்தைக் கண்டதில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தங்கள் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் இப்படி ஒரு பெரும் தவறைச் செய்திருக்கக்கூடும் என்ற எண்ணம் அதன் பெற்றொருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கக்கூடும் என்று கூறியுள்ள அந்த மருத்துவர், நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த விடயம் நீதிமன்றம் முன் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இறந்துவிட்டதாக சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒரு குழந்தை தானாக மூச்சுவிடுமானால், அப்படிப்பட்ட பரிசோதனைகள் நம்பத்தக்கவை அல்ல என்று கூறியுள்ளார் நீதிபதி Mr Justice Hayden.
ஆகவே, Academy of Medical Royal Colleges (AMRC) அமைப்பிலுள்ள மருத்துவர்களும், நெறிமுறைகளை வகுப்போரும், ஒரு குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டது என்பதை தீர்மானம் செய்யும் காரணிகளை மீளாய்வு செய்யத் துவங்கியுள்ளனர்.