மதுரை: நகைகளின் ஹால்மார்க் விபரத்தை வெப்சைட்டில் பதிவேற்றும் கோரிக்கையை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்த அஜித்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இந்திய தர நிர்ணய ஆணையத்தால் (பிஐஎஸ்) அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்களில் நகைகளை பரிசோதித்து, ஹால்மார்க் அங்கீகாரம் வழங்குவது வழக்கம். ஆனால், ஹால்மார்க் மையங்களில் குறிப்பிட்ட சில நகைகளை மட்டுமே பரிசோதித்து அங்கீகாரம் பெறுகின்றனர். இதற்கு எண் வழங்கப்பட்டு, அதன் விபரம் வெப்சைட்டில் பதிவேற்றப்படும்.
பெரும்பாலான நகைகளை ஹால்மார்க் மையங்களில் பரிசோதிப்பதில்லை. ஆனால், பரிசோதிக்காத நகைகளையும் ஹால்மார்க் பெற்றதாக விற்கின்றனர். இதனால், ஹால்மார்க் மையங்கள் பாதிக்கின்றன. இதை தடுக்க, நகைகள் வாங்கியவர், ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற விபரம் உள்ளிட்டவற்றை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்திய தர நிர்ணய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.