இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டியானது தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் சமர்ப்பித்தது. இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், ஏராளமான கல்வியாளர்கள் தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றினர்.
தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது.
தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை செயல்படுத்துவது பற்றி மத்திய அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, எழுத்துப்பூர்வமான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை என மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய கல்விக்கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள தொடங்கியுள்ளது. இதற்கு எழுத்துப்பூர்வமான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை என்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாக எதிர்க்கட்சியாக இருக்கும்போதிலிருந்தே திமுக தெரிவித்து வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, எழுத்துப்பூர்வமான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தேசிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதில் உள்ள தேவையில்லாத சிலவற்றை நீக்கிவிட்டு நாங்கள் மாநில கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு வகுப்போம் என்று அவர் தெரிவித்திருந்தார்.