சென்னை: செப்டம்பர் 10 ஆம் தேதி, பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “செப்டம்பர் 10 ஆம் தேதி பொறியியல் இளநிலை படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படுகிறது.
பொறியியல் கலந்தாய்வு நவ. 13 ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் பொறியியல் பாடங்களில் தமிழ்ப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த ஆண்டே பொறியியலில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
6 முதல் 12 வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
செப்டம்பர் மாத இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கப்படும்.
மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு போதிக்கப்படும“ என்றார்.
முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதியன்று நடந்தது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.25-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தாமதமானதால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நீட் முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
இந்த நிலையில் செப்.10 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடக்கும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.