அகமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டு இருக்கும் அடல் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து இருக்கிறார்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆறு இருக்கிறது. இதனை காண வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசும் மத்திய அரசும் எடுத்து வருகிறது.
மோடி பேச்சு
அதன் ஒரு பகுதியாக எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் என்ற பெயரில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடல் மேம்பாலம் சபர்மதி ஆற்றின் இரு கரைகளை மட்டும் இணைப்பதோடு இன்றி, இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பும் பொறியியலில் தனித்து நிற்கிறது.
வாஜ்பாய்க்கு மரியாதை
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு குஜராத் அதிக அன்பை காட்டியது. கடந்த 1996 ஆம் ஆண்டு காந்திநகரில் அடல் பிகாரி வாஜ்பாய் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார். இந்த பகுதியில் அவருடைய பெயரில் பாலம் அமைத்து உள்ளது அவருக்கு நாம் கொடுத்து இருக்கும் மரியாதை.” என்றார்.
300 மீட்டர்
சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கும் வகையில் 300 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் மேற்கு கரையில் இருக்கும் மலர் பூங்கா மற்றும் மைதானம் இடையே இருக்கும் பிளாசாவை கிழக்கு கரையில் இருக்கும் கண்காட்சி மையத்துடன் இணைக்கிறது.
அழகிய வடிவமைப்பு
அடல் பாலத்தின் மேற்கூரை வடிவமைப்பே தனித்துவமாக இருக்கிறது. பல வண்ணங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மேற்கூரை வண்ணமயமாக காட்சி தருகிறது. இதில் செல்லும் மக்களுக்கு நல்லதொரு காட்சியையும் அனுபவத்தையும் வழங்கும். குஜராத்தின் பிரபலமான பட்டம்விடும் திருவிழாவை கொண்ட பட்டத்தின் வடிவில் அதன் மேற்கூரைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.