கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரை புகைப்படங்களை வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
வன்முறை
பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதனால் பள்ளி அமைந்துள்ள கனியாமூர் பகுதியே கலவரமயமானது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. மாணவி மரண வழக்கு தமிழ்நாடு அரசால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
5 பேர் கைது
வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்த நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன்
5 பேரும் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்கள் ஜாமீன் கோரி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமின் வழங்கியது.
முதலமைச்சருடன் சந்திப்பு
முன்னதாக மர்ம மரணம் அடைந்த மாணவியின் தாய், “என் மகள் மரணம் திட்டமிட்ட கொலை தான் என்று அனைவருக்கும் தெரியும். இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நியாயம் கேட்க உள்ளேன்.” என்றார். இந்த நிலையில் அவர் முதலமைச்சரை சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் 3 பேர் கைது
இந்த நிலையில், கனியாமூர் பள்ளி முன்பாக கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரை புகைப்படங்களை வைத்து கண்டுபிடித்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ், இன்று அவர்களை கைது செய்துள்ளது. நீல நிற டீ சர்ட் அணிந்து செந்தமிழன் (27), காவி வேட்டி அணிந்த முரளி (32) ஆகியோர் போலீஸ் வாகனத்தின் மீது கல்வீசியதற்காக கைதாகியுள்ளனர். மஞ்சள் சட்டை அணிந்த பிரகாஷ் (24) போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.