தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து பயோடீசல் மற்றும் கலப்பட டீசல்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இன்று இந்த கலப்பட டீசல் தயாரிக்கும் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பயோ மற்றும் கலப்பட டீசல்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. படகுகளுக்கு இந்த டீசல் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது எங்கிருந்து வருகிறது என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. அதில் தூத்துக்குடி சிப்காட் அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் வைத்து கலப்பட டீசல் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து 20000 லிட்டர் டீசல் எந்தவித ஆவணங்களுமின்றி திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு அவை இந்த குடோனில் வைக்கப்பட்டு அதோடு மண்ணெண்ணெய் உள்ளிட்ட சில சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டு டீசல் தயாரிக்கப்படுகிறது.
இந்த குடோனில் ஒரு பெரிய தொழிற்சாலை போன்று கலப்பட டீசல் தயாரிக்கப்படுகிறது இந்த கலப்பட டீசல் ஆனது மிகவும் ஆபத்தானது இவர்கள் இதனை ஆபத்தான முறையில் கையாண்டு வருகின்றனர் என்று கூறிய அவர்.. ‘’இங்கு தயாரிக்கப்படும் டீசலானது தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன்பிடி படகுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அரசு மீன்பிடி படங்களுக்கு டீசல் மானியம் வழங்கினாலும் அவர்களுக்கு அதிகமான டீசல் தேவைப்படும் சூழ்நிலையில் இங்கிருந்து இந்த டீசலை வாங்குகின்றனர். இந்த டீசலானது வெளிச்சந்தையில் கிடைக்கும் டீசலை விட விலை குறைவாக உள்ளதால் மீனவர்கள் இதனை வாங்குகின்றனர்’’ என்று அவர் கூறினார்.
இந்த டீசல் மீன்பிடி படகுகளில் உபயோகப்படுத்தும்போது படகுகளில் உள்ள இன்ஜின் பழுது ஏற்படும் என்ற எச்சரிக்கையும் அவர் விடுத்தார். இந்த கலப்பட டீசல் பயன்படுத்துவதால் தொழிற்சாலையைவிட கடல் பகுதி அதிகம் மாசு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாங்குநேரியைச் சேர்ந்த பூல்பாண்டியன் மகன் ராஜகோபால் (42), குடியாத்தம் வேணுகோபால் மகன் புஷ்பராஜ் (27), தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஆல்பர்ட் மகன் பிரவீன் (27), நெல்லை மேலப்பாளையம் குறிஞ்சி மகன் ராமசாமி (30), தூத்துக்குடி ராஜகோபால் நகர் தியாகராஜன் மகன் பவுல் அந்தோணி (35), குருஸ்புரம் டெலிங்கர் மகன் டேனியல் (44) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திரேஸ்புரம் வேலு (32) தப்பியோடிய நிலையில் காவல்துறை தேடி வருகின்றனர். இவரிடமிருந்து 40,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக இவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கலப்பட டீசல் தயாரிப்பது விநியோகம் செய்வது மூலமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரி இழப்பீடு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM