மாநகராட்சி சார்பில் படகுகள் மூலம் கூவம், அடையாற்றில் கொசு மருந்து தெளிக்கும் பணி: ஆகஸ்ட் 29-ம் தேதி தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29-ம் தேதி தொடங்க உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, தீவிர கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கொசு ஒழிப்பு பணியில் 1,262 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொசு ஒழிப்புப் பணியில் 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பிரேயர்கள், 300 பேட்டரி மூலம் இயங்கும் ஸ்பிரேயர்கள், கையினால் இயங்கும் 220 புகைப் பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 66 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப் பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் மண்டலத்துக்கு 2 படகுகள் வீதம் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. மழைநீர் வடிகால்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 233 கிமீ நீளமுள்ள நீர்வழித்தடங்களில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் கடந்த ஆக.17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 228 கிமீ நீளத்துக்கு கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் மருந்து தெளிக்கப்பட்டது.

பொதுமக்களும் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ள பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து உலர வைத்து பின்பு தண்ணீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.