ஜம்மு: காங்கிரசில் இருந்து விலகிய நிலையில், குலாம் நபி ஆசாத் இன்னும் 15 நாட்களில் காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், நேற்று முன்தினம் திடீரென கட்சியிலிருந்து விலகினார். கட்சியில் ராகுல் காந்தி செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து, சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு, அங்கு புதிய கட்சி தொடங்க இருப்பதாக ஆசாத் அறிவித்தார்.
இந்நிலையில், காஷ்மீரில் ஆசாத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரும், ஆசாத்துக்கு மிக நெருக்கமானவருமான ஜி.எம்.சரூரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரின் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத் மீண்டும் மாநில அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 15 நாளில் புதிய கட்சி தொடங்கப்படும். இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆசாத், காங்கிரசை வலுப்படுத்த 50 ஆண்டுகள் பாடுபட்ட மதச்சார்பற்ற தலைவர். காஷ்மீரில் 2019 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தைய நிலையை உறுதிப்படுத்துவதே எங்கள் கட்சியின் கொள்கை. பாஜ உத்தரவின் பேரில் ஆசாத் செயல்படுகிறார் என்ற பேச்சுக்கே இடமில்லை,’’ என்றார்.