லண்டன்: பிரிட்டனில் மின்சாரம், எரிவாயுவிலை 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக பிரிட்டனில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் 73 சதவீத மின்சாரம் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணு சக்தி, சூரிய சக்தி, நீர்மின் சக்தி மூலம் 30 சதவீதமும், கழிவுகளில் இருந்து 10 சதவீதமும் நிலக்கரி மூலம் ஒரு சதவீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முழுமையாக நிறுத்தியதால் பிரிட்டன் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த நாட்டின் எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பான ஆப்ஜெம் நேற்று முன்தினம் மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையை 80 சதவீதம் வரை அதிகரித்தது.
தற்போது மின்சார நுகர்வோர் ஓராண்டுக்கு சராசரியாக ரூ.1.85 லட்சம் கட்டணம் செலுத்தி வரு கின்றனர். கட்டண உயர்வால் ஆண்டுக்கு ரூ.3.33 லட்சம் கட்டணம் செலுத்த நேரிடும். இதன் காரணமாக பிரிட்டனில் 84 சதவீத மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “வருவாய் குறைந்த குடும்பங்களால் மின்சார விலை உயர்வை சமாளிக்க முடியாது. அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவார்கள்’’ என்று எச்சரித்துள்ளனர்.
இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு உணவு நிறுவனங்கள், இறைச்சி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடியுள்ளன. இதன்காரணமாக அடுத்த சில மாதங்களில் பிரிட்டனில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, பிரிட்டனில் மளிகை பொருட்களின் விற்பனை 4.1. சதவீதம் குறைந்துள்ளது. இறைச்சி, மீன்களின் விற்பனை 9.4 சதவீதம் குறைந்திருக்கிறது. சுமார் 13 லட்சம் குடும்பங்கள் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர் தாமஸ் கூறும்போது, “உணவு தானியங்கள், இறைச்சி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் லட்சக்கணக்கான குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுகிறது’’ என்று தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் கூறும்போது, “உக்ரைன் மக்கள் ரத்தத்தை சிந்தி வருகின்றனர். அவர்களுக்காக நாம் பொருளாதார ரீதியாக தியாகம் செய்ய கடமைபட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
பிரதமரின் விளக்கத்தை மக்கள் ஏற்க தயாராக இல்லை. விலைவாசி உயர்வை கண்டித்து பிரிட்டன் முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த மக்கள் தயாராகி வருவதாக அந்த நாட்டு காவல் துறை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.